Saturday, May 19, 2012

என் சொந்த கதை நான் நொந்த கதை!!!




        என் கதையை படிக்கணுங்க்கிற ஆரவத்தில நீங்க இப்பிடி திரளாக வந்திருப்பது எனக்கு ரொம்ப சங்கடமாக இருக்கிறது. இது முழுவதும் என் கதை இல்லை கொஞ்சம் கற்பனையும் கலந்து எழுதி இருக்கிறேன். இதை  படிக்கிறதுக்கு முன்னாடி உங்கள் கையில் வைத்திருக்கும் அந்த சைக்கிள் செயின், அருவா, அழுகின தக்காளி, கெட்டுப்போன முட்டை போன்றவற்றை தயவு செய்து கீழே போடவும்....


          அன்று ஒன்பதாம் வகுப்பு ரிசல்ட் வரும் நாள், காலையிலேயே எழுந்து குளித்து விட்டு, பல் விளக்கினேன் என்று நினைக்கிறேன் சரியா ஞாபகம் இல்லைங்க, கண்ணாடி முன் சுமார் ஒரு மணி நேரம் அமர்ந்து தயாராகிக்கொண்டிருந்தேன். என் கூட படிச்ச பொண்ணுங்க  (பிகருங்க கிடையாது சுமார் தான்) வருவாங்கல்ல அதுதான்..


எனது பள்ளிக்கூடம்



           பஸ் புடிச்சு அரை மணி நேரம் முன்னாடியே பள்ளிக்கூடம் வந்திட்டேன். உடனே கண் அருகில் இருக்கும் சலூன் கடையை தேடியது..  (எதுக்கா? அதான் பஸ்சில் வந்திருக்கிறேன்ல்ல மேக்கப் கலஞ்ச்சிருக்கும்ல அதான்) உடனேயே அந்த சலூன் கடையில் போய் சலூன் கடை அண்ணனுக்கு வணக்கம் போட்டு விட்டு அங்கிருந்த தண்ணியில் முகத்தை கழுவி விட்டு முடிஞ்ச அளவுக்கு பவுடர் எடுத்து பூசி, தலையை வாரி விட்டு அங்கிருந்து கவனிக்க தொடங்கினேன் யாராவது வர்றாங்களா என்று. தூரத்தில் இரண்டு பெண்கள் வருவது தெரிந்தது. சலூன் கடை அண்ணனுக்கு ஒரு நன்றியை சொல்லிவிட்டு பள்ளியின் உள்ளே சென்றேன். எல்லாரும் ரிசல்ட் படிக்கப்போறதை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர் நான் மட்டும், எனது விழிகள் மட்டும், அவளை தேடியது       (பெயர் சொல்ல முடியாது எதிர்காலத்தில பிரச்சனை வரும்ல) கண்கள் அவளை கண்டு பிடித்தது... (மானின் இரு கண்கள் கொண்ட மானே மானேஎன் மனதில் ஒலித்தது)   அவளை பார்த்து சிறு புன்னகை செய்தேன் அவளும் புன்னகைத்தாள் கண்களால் இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம் டீச்சர் வருவதை கவனிக்காமல்.. ஒவ்வொரு பெயராக கூப்பிட்டு மார்க் சொல்லிக்கொண்டிருந்தார், அடுத்து என் பெயர் கூப்பிட்டார் அருகில் மார்க் பேப்பர் வாங்க சென்ற என்னை பார்த்து; என்னடா இந்த வாட்டி எப்பிடியோ பக்கத்தில் இருந்தவன பாத்து எழுதி பாஸ் ஆயிட்ட அடுத்து பத்தாம் வகுப்பு காப்பி அடிக்க முடியாது ஒழுங்கா படிச்சு எழுதி பாஸ் பண்ணுற வழிய பாரு.....  (டீச்சர் இப்படி சொன்னது கூட வருத்தம் இல்லை, ஏன்னா உண்மையைத்தான் சொன்னாரு. ஆனா அதை பொண்ணுங்க முன்னாடி சொன்னாருன்னு தான் வருத்தம்) இவ்வளவு நேரமா நான் பொண்ணுங்க முன்னாடி மஸில் பிடிச்சுக்கிட்டு நின்றது எல்லாம் ஒரு நிமிடம் பலூனில் இருந்து வெளியேறிய காற்று மாதிரி புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....


        அந்த வலியோடு வீட்டில் வந்தேன், அம்மா கேட்டாங்க; என்னடா பாஸ் ஆயிட்டியா? நான் ஆமா என்றேன், உடனே அம்மா அப்பாவை பார்த்து என்னங்க புள்ள பத்தாம் வகுப்பு போகப்போறான் நான் போய் ஏதாச்சும் இனிப்பு பண்ணட்டுமா, அதுக்கு அப்பா; அவன் எடுத்திருக்கிற மார்க்குக்கு கடையில போய் காலணாவுக்கு நாலு தேன் மிட்டாய் வாங்கிட்டு வந்து நீயும் உன் மகனுமா சாப்பிடுங்க அது போதும். அவன் எடுத்திருக்கிற மார்க் பாரு எல்லாத்துக்கும் ஜஸ்ட் பாஸ். டேய்... ஒன்பதாம் வகுப்பு பாஸ் ஆயிட்டேன் என்ன அந்த ஸ்கூலில் சேருங்க, இந்த ஸ்கூலில் சேருங்க சொன்ன.. அப்பிடியே தூக்கி கொண்டு போய் கடலில போட்டிருவேன்.. (கடலில் தூக்கி போட்டிருவேன்னா கடல்ல தூக்கிப்போட்டு கொல்றதுக்கில்ல கடலில் அப்பாகூட மீன் புடிக்க கூட்டிட்டு போயிடுவாராம்)


         உடனே நான் மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டேன் (இப்போவாச்சும் வேற ஸ்கூலில் போய் புது பிகறுங்க ஏதாச்சும் தேறும்னு பாத்தா அப்பா விட மாட்டாரு போல, அத விடுங்க பஸ்சில் போய் தினமும் பாக்கட் மணியாச்சும்  கிடைக்கும்னு நினைச்சா அதுவும் போச்சா)


        விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறக்கும் நாள் வந்தது அன்று காலை சீக்கிரம் எழுந்து குளித்து விட்டு ஃபேர் & லவ்லி, பவுடர் எல்லாம் எடுத்து பூசி விட்டு கண்ணாடி முன் போய் நின்றேன், ஏதோ கம்மி ஆகுற மாதிரி இருந்துச்சு அது வேற ஒண்ணும் இல்ல மீசை தான், (பக்கத்து ஊரில் இருந்து பெரிய பசங்க வருவாங்க ஏன்னா சுத்தி இருக்கிற ஊரிலேயே எங்க ஊரில் தான் +2 வரைக்கும் இருக்கு. ஒன்பதாம் வகுப்புக்கு பிறகு நிறைய பசங்க இங்க தான் படிக்க வருவாங்க) எப்பிடி மீசை வைக்கிறது யோசிச்சிட்டு இருந்தேன் அக்காவோட கண் மை ஞாபகம் வந்துச்சு அக்காவுக்கு ஒரு தேங்க்ஸ் மனசுக்குள்ள சொல்லிட்டு, கண் மை எடுத்து அப்பிடி இப்பிடின்னு அரை மணி நேரமா வரைஞ்சு ஓகே ஆக்கிட்டேன் இப்போ மீசையும் ரெடி ஆனா வீட்டில யாருக்கும் தெரியாம வெளியே போகணுமே எப்பிடின்னு யோசிச்சேன், அம்மா வேற சாப்பிட கூப்பிர்றாங்க, அம்மாகிட்ட ஸ்கூலில் இருந்து திரும்பி வந்து சாப்பிர்றேன்னு சொல்லிட்டு பேக் எடுத்துவிட்டு வேகமா வெளியே கிளம்ப, அப்பிடியே  அக்கா முன்னாடி... (ம்ம்க்கும் இந்த மிஷ்யனும் ஃபெயிலா)  என் அக்கா பாத்து சிரிக்க ஆரம்பிச்சா   (அவ சிரிச்ச சிரிப்பு என் அம்மாக்கிட்ட போட்டு கொடுக்காமலே போட்டு கொடுத்திட்டா) என் அம்மாவும் வந்திட்டாங்க அக்காவும் அம்மாவும் சேர்ந்து திட்டி (நேத்தைக்கு அவங்கமெட்டி ஒலிபாக்க முடியாத கடுப்புல வேற இருந்தாங்க) முகத்த கழுவ சொன்னாங்க, வீட்டுக்கு முன்னாடி பக்கட்டில் இருந்த தண்ணி வச்சு முகத்தை கழுவ கழுவ போனது என் மீசை மட்டும் இல்லை அரை மணி நேரமா கண்ணாடி முன்னாடி நின்னு போட்ட பவுடரும் ஃபேர் & லவ்லியும் தான். சரி உள்ள போய் திரும்பவும் போடலாம்னா பஸ் வந்திடுச்சு.. அப்பிடியே நொந்து நூடுல்ஸ் ஆயி அப்பிடியே வலியோடு கிளம்பினேன்... (அந்த சலூன் கடையில போய் அட்ஜஸ்ட் பண்ணலாம்னா கடை லீவு ஏன்னா இன்னைக்கு செவ்வாய் கிழமை)


       என் வகுப்பு எங்கே என்று தேடி கண்டு பிடிச்சு உள்ளே செல்றதுக்கு முன்னாடி     (கடவுளே என்னோட எல்லா மிஷ்யனும் ஃபெயில் ஆயிடுச்சு அதுக்கு ஆறுதலாக உள்ள நல்ல ஃபிகறுங்களா காட்டுப்பா) வேண்டிக்கிட்டு உள்ளே சென்றேன். உள்ளே ஒரே கூட்டம். ஏன் இந்த கூட்டம்னு பாத்தா புது பசங்க (ஆஸி கிரிக்கெட் வீரர் மாத்தீவ் ஹைடன், ஆண்ட்ரீவ் சைமண்ட்ஸ் தான் ஞாபகம் வருது) பக்கத்து ஊரு காரனுங்க பொண்ணுங்கள சுத்தி நின்னு அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்கானுங்க, பொண்ணுங்களை பாக்க முடியாத கடுப்புல வயிறு தீயா எரியுது அந்த பசங்க வெளியூர் காரங்க தானே பசங்கள திட்டலாம்னு பாத்தா அவுங்க உருவம் வேற என்னை பயமுறுத்துது. ஆசையை அடக்கிட்டேன், மனச கட்டுபடுத்திக்கிட்டேன், எப்பிடியும் வகுப்புல வாத்தியார் வந்தா இவனுங்க போயிருவானுங்க என்கிற நம்பிக்கையில் காத்து இருந்தேன். வாத்தியார் வந்தார் எல்லாரும் எல்லாருடைய இடத்தில போய் உக்காந்தாங்க நான் மெதுவா திரும்பி பொண்ணுங்கள பாக்கலாம்னு திரும்ப வாத்தியாரு கூப்பிட்டாரு, தம்பி நீ இங்க முன்னாடி பெஞ்சில வந்து உக்காருன்னாரு, வகுப்பில இத்தன பேரு இருந்தும் என்னை மட்டும் ஏன் கூப்பிட்டாரு  (ஏன்னா நான் உசரம் கம்மியாம்) இந்த வாத்தியாரு வேற அசிங்கப்படுத்திட்டரே மனசுக்குள்ளே அழுதேன்...

          வகுப்பு முடிஞ்சது கிளம்ப தயாரானேன் அப்போது யாரோ பின்னாடி இருந்து பேரு கூப்பிட்டாங்க, திரும்பி பார்த்தா ஒரு பெண்!! (தேவதை மாதிரி எல்லாம் கிடையாது ஆனா அழகா இருந்தா!! ஆனா என் அழகு கூட ஒப்பிட்டு பார்த்தா என்ன விட அழகு கொஞ்சம் கம்மி தான்) என்னய்யா கூப்பிட்டீங்கன்னு கேட்டேன், ஆமா என்று சொன்னாள், என்னால் நம்பவே முடியவில்லை திரும்பவும் கேட்டேன் அவள் ஆமா என்றாள், எதுக்கு கூப்பிட்டன்னு கேட்டேன், அதற்கு திரும்பி போக எந்த பஸ்சில் போகனும்னு தெரியாது, என் ஊரு போக வேண்டிய பஸ் வந்தா சொல்றீயா என்று கேட்டாள்; (கண்ணா லட்டு திங்க ஆசையா ஞாபகம் வந்துச்சு..) சொல்றேன் என்று சொன்னேன். ரெண்டு பேருமா சேர்ந்து வெளியே வந்து பஸ்சுக்கு காத்திருந்தோம்.


   இவள மாதிரி இருந்தான்னா நம்பவா போறீங்க!!! ஆனா அவ இதுக்கும் மேல..




        அப்போது பக்கத்து வீட்டு அண்ணன் ஒருத்தன் எல்லா பொண்ணுங்ககிட்டையும் கடலை போட்டுக்கிட்டே  நாங்க இருக்கிற பக்கம் வந்து எங்கள பார்த்து கேட்டான்; என்னடா முதல் நாளே லவ்வா, அவ்வளவுதான் அந்த பொண் என்னை விட்டு விலகி போயிட்டாள். அடப்பாவி கிடச்ச ஒரு பொண்ணையும் தொரத்தி விட்டுட்டீயேடா நீ நல்லா இருப்பியான்னு அவன் மூஞ்சிய பார்த்து கேக்கணும்னு ஆசைதான் ஆனா பயமா இருந்துச்சு, அதனால மனசில கேட்டுக்கிட்டு வீடு நோக்கி நடந்தேன். அப்போ தான் புரிஞ்சது நான்அதுக்கு நான் சரி பட்டு வரமாட்டேன்னு”.....



அன்று முடிவு பண்ணினேன் இனிமே எந்த பொண்ணு பின்னாலையும் போகக்கூடாதுன்னு.....