Friday, August 17, 2012

பொண்ணு கை புடிச்சிழுக்கும் க(கெ)ட்டதொரை...!!!


      சந்தில் கடலை சாகுபடியின் மன்னன் நம்ம “கட்டதொரை”யின் லீலைகளில் ஒரு சில இது உங்களுக்காக. நேரம் இருந்தால் படிங்க, நேரம் இல்லாட்டியும் படிங்க நீங்க படிச்சா மட்டும் போதும், நீங்க படிச்சா மட்டும் போதும்.....!!!! 

     அன்று தான் கட்டதுரை அவங்க அப்பா, அம்மாவோட எங்க பக்கத்து வீட்டில குடி வந்த நாள். அப்பா சொல்லி தான் நான் கேள்வி பட்டேன், யாரோ பக்கத்து வீட்டில புதுசா குடி வந்திருக்காங்கன்னு, மூணாவது நாள் தான் நான் கட்டதொரையை முதல் முதலா பார்க்கிறேன். பேருக்கு ஏத்த மாதிரி வாட்ட சாட்டமா இருப்பான் நமக்கு கம்பெனிக்கு ஆள் ஆச்சேன்னு  எதிர்பார்த்தா, இப்பத்தான் நாலாம் வகுப்பு படிக்கிறானாம். (இன்னும் கை சப்புறதையே விடலைன்னா பாத்துக்கோங்க) சரி இந்த படிக்கிற சின்ன புள்ளைய கொண்டு ஏன் இவுங்க இப்பிடி திடீர்னு வீடு மாறி குடி வந்திருக்காங்கன்னு விசாரிச்சா, நம்ம கட்ட சின்ன வயசிலேயே லீலைகளின் மன்னனாம், சின்ன வயசிலேயே பக்கத்து வீட்டு பொண்ணுங்ககிட்ட குடுக்கிற அலப்பறைய தாங்க முடியாம தான் இந்த வீடு மாற்றமாம். சரி அதை விடுங்க இந்த குழந்தைக்கு ஏன் இப்பிடி பேரு வச்சிருக்காங்கன்னு விசாரிச்சா அதுக்கு வேற கதை, அதாவது எங்க எல்லாம் பொண்ணுங்க கூட்டமா கட்டம் போட்டு விளையாடுவாங்களோ அங்க எல்லாம் கட்டதொர கட்டம் ஆரம்பிச்சிருவாராம்.

     கட்டதொரயோட கதைய கேட்டு இம்ப்ரெஸ் ஆயி எப்பிடியாவது கட்டதொரைய நம்ம கேங்க்ல சேர்த்திர்லாம்னு தோணிச்சு. அடுத்தநாள் நான் காலேஜ் போக ரெடி ஆயிட்டு இருந்தேன். பக்கத்து வீட்டில் இருந்து கட்டதொரயோட அம்மா என்ன கூப்பிட்டு; “தம்பி இவனுக்கு ஸ்கூலுக்கு போக வழி தெரியல, நீ காலேஜ் போகும்போது இவனையும் கொண்டு போயி விட்டிடுப்பா” நானும் பின்னாடி வர்ற விளைவுகள் தெரியாமல் ஆமான்னு சம்மதிச்சேன். ஆனா கட்டதொர ஸ்கூலுக்கே போகமாட்டேன்னு அடம்பிடிச்சிட்டு இருந்தான். எல்லாரும் சொல்லி பாத்தாச்சு, கெஞ்சியும் பாத்தாச்சு ம்ஹும் நடக்கவே இல்லை. அப்புறம் நான் போய் சொன்னேன்; “டேய் கட்டதொர வாட, மாமா உன்ன தோளில தூக்கி வச்சு “கை வீசம்மா கை வீசு, கடைக்கு போகலாம் கை வீசு” பாட்டு பாடி கூட்டிட்டு போறேன்” அதுக்கு கட்டதொர; “எனக்கு அந்த பாட்டு வேணாம் “அண்டங்காக்கா கொண்டக்காரி” பாட்டுதான் வேணும் பாடுவியான்னு கேட்டான்?” (ம்க்ம்ம்... வில்லங்கத்த நானே தான் விலை கொடுத்து வாங்கிட்டேனோ) ஆமான்னு சம்மதிச்சேன். (வேற வழி)


அந்த புள்ளைய என்னத்த சொன்னானோ..!! #ரொமாண்டிக் லுக் பாருங்க...!!

Photo by @krajesh4u

     ஒரு வழியா தோளில தூக்கி வச்சுகிட்டு “அண்டங்காக்கா கொண்டக்காரி.. ரண்டக்கா, ரண்டக்கா”... பாட்டு பாடிக்கிட்டே தெருவில நடந்து போனேன், போறவங்க வர்றவங்க எல்லாரும் என்னையே பாக்கிறாங்க, ஏன்னா அந்த தெருவிலேயே கொஞ்சம் அமைதியான, அழகான, அறிவானா, ஸ்மார்ட்டான பையன் நான் தான். (ஓவராத்தான் போறேனோ, போவோம்,போவோம்) அடுத்த தெருவ கடக்கும்போது என் கூட காலேஜில் படிக்கிற பொண்ணுங்க என்ன பாத்து சிரிச்சுக்கிட்டே கடந்து போனாங்க, எனக்கு புரிஞ்சு போச்சு அது வேற ஒண்ணும் இல்ல, நான் தோளில ஒரு குட்டி சாத்தான சுமந்து போயிட்டு இருக்கேன்ல அதான் என்னப்பாத்து கிண்டலடிச்சிட்டு போறாங்கன்னு நினச்சேன். ஆனா காரணம் அதில்ல, க்ராஸ் ஆயி போன பொண்ணுங்கள பாத்து தோளில இருக்கிற நம்ம கட்டதொர சிக்னல் விட்டிருக்காருன்னு (அது காலேஜூக்கு போனதுக்கப்புறம் தெரிஞ்சது) அதை எல்லாம் தாங்கிக்கிட்டு நம்ம பக்கத்து வீட்டு பையன்தானே நாளைக்கு நமக்கு எதாவது தேவைன்னா (அதான் பக்கத்து வீட்டு பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுக்கிறது அந்த மாதிரி) அவன்தானே பாத்துப்பான்னு மனச தேத்திக்கிட்டு திரும்பவும் நடந்தேன். ஏறக்குறைய ஸ்கூல் பக்கத்துல வந்துட்டேன், திடீர்னு என் தோள் ரொம்ப சூடாயிடுச்சு, என்னான்னு பாத்தா நம்ம கட்டதொர கெட்டதொரையா மாறி தோளிலேயே உச்சா போயிட்டாரு (ஆஹா இது வேறையா) இங்கேயே இறக்கி விட்டு தண்ணில அலசலாம்னா இவரு வேற அழுவாரு என்ன பண்றது, அப்பிடியே நடந்தேன். அப்பத்தான் ஸ்கூல் கடற்கரை பக்கத்தில இருப்பது ஞாபகம் வந்தது. கட்டதொரைய கடல் பாக்கிறதுக்கு கூட்டிட்டு போறமாதிரி கூட்டி போய் அங்க என்னோட சட்டைய துவச்சு காய வச்சிட்டேன். ஆனா கட்டதொர மட்டும் டவுசர கழட்ட சம்மதிக்கவே இல்ல. ஆனா கடல்ல விளையாடுனதில கட்டதொரைய அறியாமலையே டவுசர்ல தண்ணி பட்டு அழுக்கு போயிடுச்சு.

     சட்டை காஞ்சது (என் மனசும் சேர்ந்து காஞ்சிடுச்சு) எடுத்துப்போட்டுக்கிட்டு திரும்பவும் தோளில சுமந்து நடக்க ஆரம்பிச்சேன். ஒரு நிமிடம் நடந்ததெல்லாம் என் கண் முன்னாடி வந்து போச்சு. மனசுக்குள் அழுதேன்... (வெளியே காட்டிக்கவே இல்லையே) ஸ்கூல் வந்தது கட்டதொரைய தரையில இறக்கி விட்டிட்டு தப்பிச்சேண்டா சாமின்னு அங்க இருந்து ஓடிட்டேன். கரெக்டா ரெண்டு மணி நேரம் இருக்கும் பிரின்சிபால் ரூமில் இருந்து அழைப்பு வந்தது, என்னன்னு போய் பார்த்தா நம்ம கட்டதொரை உக்கார்ந்திருக்கான். பார்த்ததுமே உடம்பு உதறிடிச்சு, கட்டதொரை வேற ரொம்ப விவகாரமான ஆளு அதான், பிரின்சிபால் கிட்ட என்னான்னு கேட்டேன் அதுக்கு பிரின்சிபால்; காலைல வீட்டில சண்டை போட்டுட்டு வந்துட்டியாமே, அதான் உங்க அம்மா உன்னோட தம்பிய அனுப்பியிருக்காங்க, போய் பேசு; (அடப்பாவி நீ என் தம்பியா, எங்க அம்மாக்கிட்ட நான் சண்டை போட்டேனா) ஏதோ என்னை சுத்தி நடக்குதுன்னு புரிந்தது ஆனா என்னான்னு புரியல ஒரே குழப்பமா இருந்துச்சு. கட்டதொரைய தனியா கூப்பிட்டேன் என்னன்னு கேட்டேன் அதுக்கு அவன்; எங்க டீச்சர் கூப்பிட்டிட்டு வர சொன்னார்னு சொன்னான். எதுக்குனு கேட்டேன்; கிளாஸ் தேர்வில கம்மியா மார்க் எடுத்ததுக்கானான். டேய் ஸ்கூல் தொறந்ததே இன்னைக்கு தாண்டா அதுக்குள்ள மார்க் கம்மியா எடுத்தேன்னு வரச்சொன்னாங்களானு கேட்டேன், அதுக்கு முழிச்சிட்டு இருந்தான் சரி என்னான்னுதான் பாப்போம்னு தோணிச்சு. பிரின்சிபால்கிட்ட இருந்து அனுமதி வாங்கிட்டு ரெண்டு பேரும் கிளம்பினோம்.

     ஸ்கூலுக்கு உள்ள வந்ததும் ஹெட்மாஸ்டர் அறைக்கு கூப்பிட்டிட்டு போனான் அங்க ஹெட்மாஸ்டர் என்னை பார்த்து; ஏம்பா நீ இவனுக்கு யாருன்னு கேட்டார். அதுக்கு நான் கட்டதொரையோட தம்பின்னு சொன்னேன். (அப்பிடித்தானே சொல்லி வச்சிருக்கான்) அதுக்கு வாத்தியாரு; ஸ்கூலுக்கு வந்த முதல் நாளே 12-ம் வகுப்பு பொண்ணுக்கிட்ட நோட்புக் புடிங்கிட்டு ஓடியிருக்கான், அத கேட்கிறதுக்கு போன வாத்தியாரு வேட்டிய உருவிட்டு ஓடிட்டான், ஹெட்மாஸ்டர் வகுப்புக்கே போய் கூப்பிட போனா கல்லு விட்டு அடிச்சிருக்கான், வகுப்புக்கு வந்த முதல் நாளே இப்பிடியெல்லாம் பண்ணியிருக்கான் இந்த மாதிரி பையன எங்க ஸ்கூல்ல படிக்க வைக்க முடியாது எங்க ஸ்கூலுக்குனு ஒரு டிசிப்பிளின் இருக்கு ஆனா இந்த பையன் சச்சச்ச்ச.... எல்லா வாத்தியார் முன்னாடியும் தலை குனிஞ்சு நின்னேன்வேற வழி, ஆனா அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாம பாக்கட்டில் இருந்த குச்சி மிட்டாய எடுத்து சாப்பிட்டிட்டு இருந்தான் நம்ம கட்டதொரை. ஒரு வழியா எல்லா வாத்தியார்க்கிட்டையும் மன்னிப்பு கேட்டுட்டு இனிமே இந்த மாதிரி நடக்காதுன்னு சொல்லிட்டு கட்டதொரைய வகுப்புல விட்டிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

     போகும் வழியில் யோசிச்சிட்டே போனேன், இத்தன வருஷம் படிச்ச நானே இதுவரைக்கும் ஒரு நாள் கூட வீட்டில இருந்து யாரையும் கூப்பிட்டிட்டு வந்தது கிடையாது (ம்க்ம்ம்ம் அது எனக்குத்தானே தெரியும்) ஆனா இந்த கட்டதொரை முதல் நாளே என்னை இப்பிடி அசிங்க படுத்திட்டானே. இதுக்கப்புறமும் கட்டதொரைக்கு பக்கத்து வீட்டில காலம் முழுவதும் இருக்கணும்னா அய்யய்யோ.... நினச்சு கூட பார்க்க முடியல. சாயங்காலம் வீட்டுக்கு போனேன். யார்க்கிட்டையும் நடந்த எதையும் சொல்லல. அன்னைக்கே வீட்டை காலி பண்ண ஏற்பாடு பண்ணிட்டு (இப்போ சந்தோசமாயா) அடுத்த நாள் யாருக்கும் தெரியாம குறிப்பா கட்டதொரைக்கு தெரியாம நாங்க பொறந்த ஊரைவிட்டே கெளம்பி போயிட்டோம்...

     இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனை மட்டுமே என்று நீங்கள் எடுத்துக்கொண்டால் அது தவறு....!!


கட்டதொரையின் உரிமையோடு “சனியன் சகட” எழுதிக்கொண்டது :-))
  

காதல் என் காதல் அது கண்ணீரிலே...!!!


     அன்று பஸ் ஸ்டாண்டில் அவளுக்காக காத்திருந்தேன். ஆனால் அவள் வரவே இல்லை ஏன் என்று யோசித்தபடி.... (ஃபிளாஷ் பேக்)
     
      அன்று போகி எல்லாரும் பழசை போட்டு எரித்துக்கொண்டிருந்த நாள்,  எல்லார் வீட்டிலும் “போடா எல்லாம் விட்டு தள்ளு, பழசை எல்லாம் சுட்டு தள்ளு, புதுசா இப்போ பிறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா” பாட்டு கேட்டுக்கொண்டிருந்த நாள், அன்று தான் நான்  அவளை முதன் முதலில் பேருந்தில் சந்தித்த நாள், பார்த்த நிமிடமே ஆகாயத்தில் பறந்த நாள், மனதில் இளையராஜாவோட எல்லா காதல் பாடல்களும் ஒன்றாக சேர்ந்து ஒலித்த நாள், இவ்வளவு நாள் மனதில் கோவில் கட்டி வைத்திருந்த எல்லா நடிகையும் தூக்கி எறிந்த நாள்... (போதும்னு நினைக்கிறேன் இல்லாட்டி கடுப்பாகிடுவீங்க..)
      
     ஒரு நொடி தான் பார்த்தாள், ஆனால் பல ஆயிரம் கவிதைகளை மனதில் விதைத்தாள், பல முறை கண்ணால் பேச முயற்சித்தேன் ஆனால் அவள் கண்டுக்கவே இல்லை, பலமுறை செய்கையும் செய்து பார்த்தேன் பலன் இல்லை. கொஞ்ச நேரம் கழித்து அவள் இருக்கையை விட்டு எழுந்தாள். இறங்க வேண்டிய நிறுத்தம் வந்துவிட்டது என புரிந்தது. கண்ணை இமைக்காமல் பார்த்துகிட்டே இருந்தேன், இறங்கும்போதாவது “ரன்” படத்தில் “மீரா ஜாஸ்மின்” மாதிரி திரும்பி பார்ப்பாள் என்று, ஆனால் அவள் கவனிக்கவே இல்லை. ஆனாலும் நான் பார்த்துக்கிட்டே இருந்தேன் அவள் எங்கே செல்கிறாள் என்று, கண் எட்டும் தூரம்வரை அவள் நடந்துக்கிட்டே இருந்தாள். சரி நானாவது இறங்கி அவள் பின்னால் போகலாம்னா அதுவும் முடியாது, ஏன்னா எனக்கு பாட்டி இறந்ததுக்கு போக வேண்டி இருந்தது, அப்பா, அம்மா எல்லாரும் முன்னாடியே கிளம்பிட்டாங்க நான்தான் அப்புறமா வர்றேன்னு சொல்லி இப்போ போயிட்டிருக்கேன். பஸ் கிளம்புது... எப்பிடியும் கொஞ்ச நாள் இங்க தான் இருக்க போறோம் கண்டிப்பா பாத்திர்லாங்கிற நம்பிக்கையில் நான் மனச தேத்திக்கிட்டு, இறந்த பாட்டிக்கு ஒருவாட்டி மனசில நன்றி சொல்லிக்கிட்டேன். (இந்த பயணமே பாட்டியால் தானே)
     
     பாட்டி வீடு வந்தது, வீட்ட சுத்தி ஒரே அழுகை சத்தம், நானும் அழுற மாதிரி முகத்த வச்சுக்கணும் இல்லாட்டி தப்பாயிடும். எவ்வளவோ முயற்சி பண்ணினேன் ஆனா சிரிப்புதான் வந்துச்சு. அப்பிடி இப்பிடி கஷ்டப்பட்டு முகத்த ஒரு வழியா முறைப்பா சற்று விறைப்பா வச்சுக்கிட்டேன். ஒரு வழியா பாட்டியோட காரியங்களெல்லாம் முடிந்து எல்லாரும் வீட்டுக்கு வந்திட்டாங்க, காலையில சீரியஸா அழுதிட்டு இருந்தவங்க இரவு ஆனதும் சீரியல் பத்தி பேச ஆரம்பிச்சிட்டாங்க எனக்கு ஒண்ணும் புரியலை. இப்பத்தான் உண்மையாவே பாட்டிய நினச்சு மனசுல அழுதேன். இனிமே இங்க இருந்தா சரி பட்டு வராதேன்னு நான் கிளம்பி தூங்க போயிட்டேன் ஏன்னா காலையிலே சீக்கிரமா எழுந்து வேட்டைக்கு போகணும். (வேட்டைன்னா வேற ஒண்ணும் இல்ல பஸ்ஸில பாத்த பொண்ண பாக்கத்தான்)
     
      காலையில சீக்கிரம் எழுந்து கொஞ்சம் உடற்பயிற்சி செய்து (அது வேற ஒண்ணும் இல்ல நான் வேற பாக்கிறதுக்கு சுமாரா இருப்பேனா அதான் உடற்பயிற்சி பண்ணினா மூஞ்சி கொஞ்சம் ஃப்ரெஷ்ஷா இருக்கும்னு நண்பன் சொன்னான் அதான் ஹிஹி) எல்லாம் முடிச்சு நேத்தைக்கு அவளை பாத்த அதே பஸ் ஸ்டாண்டில் அரை மணி நேரம் முன்னாடியே போய் நின்னுட்டேன். காலேஜ், ஸ்கூல் பசங்க எல்லாம் கூட்டம் கூட்டமா வந்திட்டு இருந்தாங்க. நான் அந்த எடத்துக்கு புதுசா இருக்கிறதுனால எல்லாரும் ஒரு மாதிரியா பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு மனசுக்குள்ள சின்ன பயம், நான் நின்னிட்டு இருந்த இடத்தின் நேர் எதிரா ஒரு பெருசு “விருமாண்டி” மீசை வச்சுக்கிட்டு என்னையே முறைச்சுக்கிட்டு இருந்தாரு, பயத்தில கை, கால் எல்லாம் லேசா நடுங்க ஆரம்பிச்சது. உடனே பாக்கெட்டில் இருந்த மொபைல எடுத்து பேச ஆரம்பிச்சேன்; (மொபைல்ல அழைப்பே வரவில்லை என்பது குறிப்பிட தக்கது) மச்சான் எங்கடா இருக்க?, நான் பஸ் ஸ்டாண்டில தான் இருக்கேன், சீக்கிரம் வாடா, எனக்கு எந்த பஸ்சுன்னு தெரியலடா அப்பிடின்னு பேசுற மாதிரி நடிச்சுக்கிட்டே திரும்பி அந்த “விருமாண்டிய” பார்த்தேன் இப்போ அந்த முகத்தில இருந்த தீ கனல் கொஞ்சம் குறைந்திருந்தது. அப்பாடா தப்பிச்சேண்டா சாமின்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு கொஞ்சம், எதுக்கும் பஸ் ஸ்டாண்ட் விட்டு கொஞ்சம் தள்ளி போய் நின்னேன். (பயமெல்லாம் கிடையாது எதுக்கு வீணா சண்டைன்னு ஒதுங்கி நின்னேன் அவ்வளவுதான், நான் வேற ரொம்ப கோவக்காரன் அதான்) கரெக்டா 25- நிமிஷம் கழிச்சு ஒரு பஸ் வந்தது, அதுலதான் நேத்தைக்கு அவளும் நானும் ஒண்ணா வந்தது. ஆனா இன்னைக்கு அவள காணோம்...... ஏன்? ஏன்? ஏன்?          
(ஃபிளாஷ் பேக் முடிந்தது)

(எவ்வளவு நேரம் தான் கதைய படிச்சிட்டு இருப்பீங்க போங்கய்யா போய் அர்ஜண்டா முடிக்க வேண்டியதை முடிச்சிட்டு வாங்க!!! விறு விருப்பான க்ளைமாக்ஸ் வந்திட்டு இருக்கு போங்கோ போங்கோ..)






     வலியோடு வீட்டுக்கு திரும்பினேன். நான் சோகத்துடன் இருப்பதை பாத்துக்கிட்டு என்னோட அத்தை என் கிட்ட வந்து என்னை பார்த்து ஏம்பா நேத்தைலிருந்து பச்ச தண்ணிக்கூட குடிக்காம இப்பிடி அழுதுட்டு இருக்கிறியே போய் எதாவது சாப்பிடுப்பா, இன்னும் பாட்டிய நினச்சிட்டு இருந்தா எப்பிடி?, உண்மையிலேயே இவ்வளவு நேரம் மனசுக்குள்ள அழுதுட்டு இருந்த நான் (பாட்டி செத்ததுக்கில்லை அவளை பாக்க முடியலைங்கிறதுக்கு) இப்போ உள்ளுக்குள்ள கக்க பிக்க கக்க பிக்கன்னு சிரிச்சேன். சரி இன்னைக்குத்தான் பாக்க முடியலை நாளைக்காவது பாக்க முடியும்ங்கிற நம்பிக்கையில அடுத்தநாள் போனேன்.
    
      சேம் லொக்கேஷன், சேம் பீப்பிள், சேம் விருமாண்டி, சேம் ஃபார்முலா ஆனா இந்த வாட்டி பஸ் ஸ்டாண்டில வரும்போதே நண்பன திட்டிக்கிட்டே வர்ற மாதிரி நடிச்சுக்கிட்டு வந்தேன். அதே பஸ் வந்தது, திடீரென்று ஒரு லேசான குளிர்ந்த காற்று (எல்லாருக்கும் புரிஞ்சிருக்குமே ஏன் அந்த குளிர் காற்று என்று) அதே அதே அவள் இறங்கிகொண்டிருந்தாள். இன்னைக்கு எப்பிடியாவது அவள் கிட்ட பேசியாகனும், (இல்லாட்டி பாட்டியோட ஆன்மா சாந்தி அடையாது ஆவ்வ்வ்வ்வ்) அவள் இறங்கும் போது அவள் முன்னாடி போய் நின்னேன், ம்கும்..  கண்டுக்கவே இல்லையே, (ஒரு உண்மை மட்டும் சொல்றேன் சும்மா தேவதை மாதிரி இருக்குற பொண்ணுங்கள கூட ஈசியா கரெக்ட் பண்ணிடலாம், ஆனா இந்த சப்ப ஃபிகருங்க பண்ணுற அலும்பல் இருக்கே அய்யய்யயய்யோ..) ஒரு இருவது நிமிஷம் அவள் பின்னாடியே நடந்தேன், அப்பிடியே ஒரு சந்து வந்தது இதுதான் சரியான டைம். நான் ஷ்ஷ்ஷ்... கூப்பிட்டேன், திரும்பி பார்த்தாள் லேசா சிரிச்சா (அடிப்பாவி இவ்வளவு நேரமா பின்னாடியே வர்றேன் கண்டுக்கவே இல்ல சந்துல வந்ததும் சிரிக்கிறா) உங்க பேரு என்னன்னு கேட்டேன், அதுக்கு அவள்; எதுக்கு என்று கேட்டாள், எவ்வளவு நேரம் தான் நான் உங்கள பசு மாட்ட கூப்பிர்ற மாதிரி ஷ்ஷ்ஷ்ன்னு கூப்பிர்றது பேரு சொன்னா அந்த “அழகான” பேர சொல்லி கூப்பிடலாம்ல அதான்..... என் பேரு ப்ரியா-ன்னு சொன்னாள். பேரு சொல்லியாச்சே கிளம்புங்க யாராவது பாத்திடுவாங்க. சரி கிளம்புறேன் அப்பிடியே உங்க மொபைல் நம்பர் கிடச்சா நல்லா இருக்கும்னேன், ஏன்னா நான் நாளை கழிச்சு ஊருக்கு கிளம்புறேன், திரும்ப வர்றது அடுத்த ஸ்கூல் லீவுக்குத்தான், நம்பர் கிடச்சா பேசிக்கலாம்ல ப்ளீஸ்.... சரி!! நாளைக்கு நான் தர்றேன் இப்போ கிளம்பு என்று சொன்னாள்... பேசின சந்தோஷத்தில நானும் ஓகே சொல்லிட்டு கிளம்பினேன்...
     
     அடுத்த நாள் பஸ் ஸ்டாண்டில் போகாமல் நேரா அந்த சந்து பக்கத்தில் இருக்கிற கூல் டிரிங்க்ஸ் கடையில காத்திருந்தேன். அவள் வந்துக்கொண்டிருந்தாள் எந்திரிச்சு கடைக்காரனுக்கு காசு குடுத்திட்டு கிளம்பினேன். அவளும் பார்த்த உடனே சிரிச்சா. நான் பின்னாடியே போனேன் அவள் கையில் இருந்த பேப்பரை தரையில் போட்டு விட்டு கிளம்பினாள். நான் எடுத்து படித்தேன் அதில் நம்பரும் சிறு குறிப்பும் இருந்தது அதில் பின்னாடியே வராத சீக்கிரம் போயிருன்னு எழுதி இருந்தது. (ஆஹா பெருசா வில்லங்கமா இருக்குமோ மனசுல பயந்தேன்) சரி நமக்குத்தான் நம்பர் கிடச்சாச்சே அப்புறம் எதுக்கு ரிஸ்க்க ரஸ்க் மாதிரி சாப்பிட, நானும் கிளம்பினேன்......
     
     ராத்திரி ஃபுல்லா தூக்கமே கிடையாது ஏன் என்ன பின்னாடியே வர வேணாம்னு சொன்னாள் அப்பிடி என்ன வில்லங்கமா இருக்கும், இவளுக்கு “குஷ்பு”-வுக்கு (சின்ன தம்பி-ல) இருக்கிற மாதிரி அண்ணனுங்க இருப்பானுங்களோ, ஒருவேளை “மீரா ஜாஸ்மீன்”-க்கு (ரன்-ல) அண்ணனுங்க மாதிரி இவளோட அண்ணனுங்களும் வில்லன்களா இருப்பானுங்களோ... (மனசுல எல்லா ஹீரோயினிங்க ரவுடி அண்ணனுங்களும் வந்து போனாங்க) மனசுக்கு புடிச்சிருக்கு நாளைக்கு டீப்பா லவ் பண்ணி மாட்டுறதுக்கு முன்னாடி இப்பவே அது என்னன்னு கண்டு பிடிக்கணும்னு மனசுக்கு தோணிச்சு. சரி நாளைக்கு காலையில அவளுக்கு தெரியாம ஃபாலோ பண்ணுவோம்னு நினச்சிட்டு தூங்கினேன்.
     
      காலையிலேயே அவளுக்கு முன்னாடியே சென்று அவளுக்கு தெரியாம அந்த சந்துக்கு பின்னாடி மறைஞ்சு இருந்தேன். தூரத்தில எட்டி பார்த்தேன் அவள் வருவது தெரிந்தது. அவளுக்கு தெரியாம அவள ஃபாலோ பண்ணினேன். அந்த சந்து வந்தது, அவள் போகும் வரை பொறுத்திருந்தேன், அப்புறமா பின்னாடியே சென்றேன். அந்த சந்துக்கு கொஞ்சம் தூரத்தில்  ஒரு பெரிய  வாசல் அதில் ஏதோ காலேஜ்னு போட்டிருந்தது. அவள் அதன் உள்ளே நுழைந்தாள், அப்பாடா இப்பத்தான் மனசில நிம்மதி வந்தது. (நான் வேற பெருசா நினச்சு பயந்தே போனேன்) சரி அவள் தான் காலேஜுக்கு உள்ளே போயிட்டாளே நாம கிளம்புவோம்னு மனசில நினச்சிட்டு கிளம்ப திரும்பினா பின்னாடி அந்த “விருமாண்டி” மீசைக்காரர் நடந்து வர்றது தெரிந்தது. ஆஹா நம்மள பாத்தா கடுப்பு ஆயிடுவாரே மாட்டாதடா மக்கா,,,, வேகமா நடந்தேன், நடந்தேன்....  அவளுடைய காலேஜை கடந்து நடந்தேன். திடீர்னு ஷாக் ஆயி நின்னுட்டேன் அப்பிடியே ஸ்லோவ் மோஷன்ல திரும்பி பார்த்தா “என்னவள்” சென்றிருப்பது நாம நினைச்ச மாதிரியான காலேஜ் கிடையாது, அது ஒரு “டூட்டோரியல் காலேஜ்”...!!! (தென்பாண்டி சீமையில, தேரோடும் வீதியில, மான் போல வந்தவன யாரடிச்சாரோ, யாரடிச்சாரோ, யாரடிச்சாரோ..) இப்பத்தான் எல்லாம் புரிந்தது. (அந்த “விருமாண்டி” மீசைக்காரருக்கு மனசில நன்றி சொல்லிக்கிட்டேன்) இப்பத்தான் அவளை பத்தி தெரிஞ்சுக்க ஆசை அதிகம் ஆச்சு, எதுக்கும் பக்கத்து கடையில விசாரிச்சு பாப்போமேன்னு விசாரிச்சேன், அப்பத்தான் தெரிந்தது அவள் ஒன்பதாவது ஃபெயில் என்றும், நாலு வருஷமா ஒன்பதாவதுதேறாமா இருப்பதும், பத்தாவது பாஸ் ஆனா உடனே கல்யாணம் என்றும் அதுக்குத்தான் தினமும் இந்த “டூட்டோரியல் காலேஜ்” பாதை யாத்திரை என்றும் சொன்னார். பின்னாடி வராத வராத சொன்னது இதுக்குத்தானா.. இது எல்லாத்தையும் விட என்னைய ராத்திரி உறங்க விடாம எல்லா வில்லன்னுங்களையும் வர வச்சு பயமுறுத்தினாளே அதத்தான் என்னால தாங்க முடியல. மொபைல் ஃபோன எடுத்தேன் அவள் நம்பரை டெலீட்டினேன்; என்னோட மனசில இருந்த ஆசையும் சேர்த்தே தான்...

இந்த ப்ரியா இல்லைன்னா இன்னொரு திவ்யா-ன்னு மனச தேத்திக்கிட்டு நடந்தேன்..!!

(இது முடிவு இல்லை ஆரம்பம் “வேட்டை” தொடரும்..!!)