Thursday, March 7, 2013

நட்பினிலே ஒரு பிரிவொன்று வந்ததே..!!


     பள்ளி பருவத்தில் இருந்தே சூர்யாவும் விக்ரமும் நெருங்கிய தோழர்கள். விக்ரம் சற்று கோபக்காரன் மட்டுமில்லை நண்பர்களுக்கு எங்கு எப்போது பிரச்சினை நடந்தாலும் முன்னால் நிற்பவனும் கூட. இதனால் பல விளைவுகளை சந்தித்தவன் மட்டுமில்லை, ஊரிலும் விக்ரமை யாருக்கும் பிடிக்காது. சுருக்கமா விக்ரமை ஒரு பொறுக்கி என்றே சொல்வார்கள். பழகிய 25 வருடத்தில் இதுவரை சூர்யாவுக்கும் விக்ரமும் இருவருக்கும் இடையில் இதுவரை பிரிவென்பதே வந்ததில்லை, வரவிட்டதுமில்லை.



    சூர்யா விக்ரமுடன் நெருக்கமாக பழகுவது சூர்யாவின் வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை (எல்லா பெற்றோர்களும் நினைக்கும் காரணம்தான் தன் பிள்ளையும் எங்கே விக்ரமை போல மாறிவிடுவானோ என்ற பயம்) ஆனால் சூர்யா விக்ரமை தவிர யாருடனும் நெருக்கமாக பழகியதில்லை, இது சுத்தமாக பிடிக்காத சூர்யாவின் வீட்டார்கள் விக்ரமை பல முறை எச்சரித்தார்கள், இது அறிந்து சூர்யாவுக்கும் வீட்டாருக்கும் பல முறை சண்டைகள் நடந்தது. விக்ரமுடன் மட்டும் பழகக்கூடாது என்பது சூர்யாவின் வீட்டினரின் வாதம், விக்ரமை தவிர யாருடனும் பழகமாட்டேன் என்பது சூர்யாவின் வாதம். எப்பிடியாவது சூர்யாவையும் விக்ரமையும் பிரிக்க பல வழிகளில் யோசித்து கடைசியாக வெளிநாட்டிற்கு அனுப்ப முடிவு செய்து வெளிநாட்டில் இருக்கும் சூர்யாவின் அத்தானை தொடர்பு கொண்டு சூர்யாவுக்கு அங்கே ஒரு வேலை கிடைக்க ஏற்பாடு செய்தனர்.

     விசாவும் வந்தது சூர்யாவும் போக முடிவு செய்து, கிளம்பும் முந்தய நாள் இரவில் சின்னதாக விருந்து ஏற்பாடு செய்து சூர்யாவும் விக்ரமும் நண்பர்களுடன் சந்தித்து அப்புறமாக பிரிந்து சென்றனர். அடுத்தநாள் வரை விக்ரமுடன் இருந்துவிட்டு காலை வீட்டில் சென்று கிளம்ப தயாராகினான். வீட்டில் எல்லாரும் சேர்ந்து ஏர்போர்ட் வரை சூர்யாவுடன் சென்று வழிஅனுப்பிவைத்து நிம்மதி பேரு மூச்சு விட்டனர். மூன்று மாதம் கழித்து விக்ரமுக்கும் வெளிநாட்டில் வேலை கிடைத்து விக்ரமும் வெளிநாடு சென்று விட்டான். இருவரும் வெவ்வேறு நாட்டில் இருந்தாலும் அடிக்கடி அலைபேசியில் உரையாடி நலம் விசாரித்துக்கொண்டேதான் இருந்தார்கள்.

    இரண்டு வருடம் கழித்து சூர்யாவுக்கு விடுமுறை செல்ல வாய்ப்பு கிடைத்தது. விக்ரமுக்கு விசா முடிய இன்னும் மூன்று மாதம் இருப்பதால் இப்போதைக்கு விடுமுறை கிடைக்கவில்லை. சூர்யா விடுமுறைக்காக ஊரில் வந்து இரண்டு மாதம் கழித்து திரும்பவும் வெளிநாட்டில் சென்று விட்டான். அதற்கு பின் மூன்று மாதம் கழித்தே விக்ரம் ஊருக்கு வந்தான். இரண்டு பேருக்கும் ஒருவரையொருவர் நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் அடிக்கடி இணையத்தில் முகம் பார்த்து பேசிக்கொண்டார்கள்.

     சரியாக ஒரு வருடம் கழித்து விக்ரமுக்கும் விக்ரமின் மேனேஜருக்கும் இடையில் சின்ன தகராறு ஏற்பட்டு விசா முடியும் முன் கேன்சல் செய்துவிட்டு விக்ரம் ஊருக்கு திரும்ப வந்திட்டான். ஊரில் வந்து கொஞ்சநாள் கழிந்த உடன் விக்ரம் சென்னைக்கு வேலை தேடி சென்று விட்டான். இரண்டு வருடம் கழித்து சூர்யாவும் வேலை பிடிக்காமல் விசா முடிந்தவுடன் விசாவை கேன்சல் செய்துவிட்டு ஊரில் வந்தான், ஆனால் இது சூர்யா வீட்டிற்கு தெரியாது. விக்ரமும் சென்னையில் இருந்து விடுமுறை எடுத்து ஊரில் வந்து இருவரும் சந்தித்துக்கொண்டனர். நான்கு வருடம் கழித்து இரண்டு பெரும் நேரில் சந்தித்துக் கொண்டனர் இருவருக்கும் மகிழ்ச்சியை வார்த்தையால் தான் விளக்க வேண்டுமா..!

    ரெண்டு பேரும் சேர்ந்து வெளிநாட்டிற்கே வேலைக்கு போக முடிவு செய்து, அவர்களுக்கு தெரிந்த அறிந்த பல பேர்களுடன் தொடர்பில் இருந்தனர். ஒரு வழியாக விக்ரமிற்கு வேலை ரெடி ஆகிவிட்டது. விசாவிற்கு இரண்டு லெட்சம் ரூபாய் தேவைப்பட்டது. ஆனால் விக்ரமின் வீட்டில் காசு இல்லை, சூர்யாவின் வீட்டில் கேட்டால் கிடைக்கும் ஆனால் விசா கேன்சல் செய்து வந்த விஷயம் சூர்யாவின் அத்தான் மூலமாக தெரிய வந்ததால் சூர்யா கேட்டால் உதைதான் கிடைக்கும் காசு கிடைக்காது அது இருவருக்கும் தெரியும் இருந்தாலும் சூர்யா வீட்டில் காசு கேட்டு கிடைக்காததால் வீட்டில் சண்டை நடந்து வீட்டில் போவதையும் நிறுத்திவிட்டான்.

     காசுக்கு இரண்டு பேரும் பலரிடம் கேட்டும் ஒரு பலனுமில்லை. அப்போது விக்ரம் ஒரு ஐடியா சொன்னான். அதற்கு சூர்யாவும் சம்மதித்தான். அந்த ஐடியா வேறொன்றுமில்லை கோயிலில் இருந்து உண்டியலை திருடத்தான். அதற்கு முன் வெளிநாட்டில் செல்வதற்கு எல்லா முன் ஏற்பாடும் செய்தனர்.



     எல்லா ஏற்பாடும் நடந்த பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து இரவு கோயிலில் திட்டம் போட்டதுபோல் திருடிவிட்டு வந்தனர். அடுத்தநாளே எல்லா காசையும் குடுத்து டிக்கட் புக் பண்ணி அந்த இரவே விக்ரம் வெளிநாடு பறந்தான். ஒரு வாரம் கழித்து போலீஸ் சூர்யாவை தேடி வந்து விசாரித்தனர் யாரோ பார்த்ததாக புகார். கொஞ்ச நாள் கழித்து விசாரணையில் சூர்யாவை கைது செய்தனர், விக்ரமையும் தேடினர் அதற்கு சூர்யா தான் தனியாக செய்ததாக ஒப்புக்கொண்டான்.

     சூர்யாவிற்கு நான்கு ஆண்டு தண்டனை முடிந்து வெளியில் வந்தான். சூர்யா வீட்டில் இருந்து சூர்யாவின் மாமாவும், அப்பாவும் வந்து சூர்யாவை வீட்டிற்கு அழைத்து சென்றனர். யாரும் பேசாமலே “விக்ரமுடன் நடக்க வேண்டாம் என்று சொன்னோமே கேட்டியா” என்கிற மாதிரி பார்த்தனர். ஆனால் சூர்யா அதை சட்டை செய்யாமல் வெளியே சென்று நண்பர்களுத் விக்ரமை குறித்து விசாரித்தான். அதற்கு; விக்ரம் ரெண்டு ஆண்டுக்கு முன்னாடியே விடுமுறைக்கு வந்து சென்று விட்டதாகவும், புதிய வீடு வாங்கியதாகவும் அடுத்த மாதம் விடுமுறைக்கு வரும்போது கல்யாணம் நிச்சயம் ஆகி இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.

     சூர்யாவின் மனதில் ஒரே குழப்பம்; விடுமுறைக்கு வந்த விக்ரம் ஏன் என்னை வந்து பார்க்கவில்லை, ஒரு தகவலும் இல்லை.? சரி அடுத்த மாதம் விடுமுறைக்கு வருவானே பேசிக்கலாம், கண்டிப்பா ஏதாவது காரணம் இருக்கும் என்று அந்த நாளுக்காக காத்திருந்தான்.

   ஒரு மாதம் கழித்து விக்ரம் வந்ததை அறிந்து விக்ரம் வீட்டிற்கு சென்று விசாரித்தான், அதற்கு விக்ரமின் அம்மா; தம்பி அடுத்த வாரம் விக்ரமுக்கு கல்யாணம் வச்சிருக்கோம் இந்த நேரம் நீ இங்க வர்றது.... இனிமே அவனை பார்க்கவோ பேசவோ முயற்சி பண்ணாத அது நல்லதில்லை. இதை கேட்டு சூர்யா வருத்தப்பட்டாலும் மனசை தேத்திக்கிட்டு விக்ரமை பார்க்க வெளியே காத்திருந்தான். அரைமணி நேரம் கழித்து விக்ரம் காரில் வருவதை கவனித்தான், விக்ரமும் சூர்யா நிற்பதை கவனித்தான் உடனே வண்டியை நிறுத்தி கீழே இறங்கினான்.

     சூர்யா; “நல்லா இருக்கியா நண்பா..??”

     விக்ரம்; நல்லா இருக்கேன்...

     சூர்யா; அடுத்த வாரம் கல்யாணமாமே சொல்லவே இல்லை, உங்க வீட்டில வந்தேன் உங்க அம்மா திட்டினாங்க, வீட்டில வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க அதான் வெளிய காத்திருந்தேன்..

     விக்ரம்; எங்கிட்டயும் அப்பிடித்தான் சொன்னாங்க உன் கூட பேசக்கூடாது, பழகக்கூடாதுன்னு....

    நானும் யோசிச்சேன் அடுத்த வாரம் கல்யாணம் முடிஞ்சு அப்பிடியே வெளிநாட்டில குடும்பத்தோடு செட்டில் ஆயிருவேன் இனிமே பேச பழக முடியாது, அப்பிடி பாக்கும் பொது அவுங்க சொல்றது சரிதானே..
உன்னோட அக்கவுண்டில் இப்பத்தான் ஒரு அஞ்சு லட்சம் காசு போட்டேன் அதை வச்சு நீயும் ஏதாவது பண்ணிக்கோ...
தப்பா நினைச்சுக்காத...
இனிமே நாம் சந்திக்க வேண்டாம்.

     சூர்யா; லேசான புன்னகையோடு; ரெண்டு வருஷம் முன்னாடி விடுமுறைக்கு ஊர்ல வந்திருக்க என்னை வந்து பாக்கல,

யார்க்கிட்டையாவது விசாரிச்சிருப்பன்னு பார்த்தா அதும் இல்ல,

அடுத்த வாரம் கல்யாணம் அதுக்கும் என்னை கூப்பிடல்ல,

எல்லாத்துக்கும் மேலா நட்பை காசு குடுத்து நம்ம நட்போடு மதிப்பு அஞ்சு லட்சம் தான்னு சொல்லாம சொல்லிட்ட...

இப்பவும் வீட்டில இருக்கிற எல்லாரும் சொல்லியும் கேக்காம உன்னை பார்க்க வந்தேன்,
என் நண்பன் வருவான்ன்னு காத்திட்டு இருந்தேன்,
இதெல்லாம் நான் உனக்காக ஜெயிலுக்கு போனேங்கிற காரணம் மட்டும் இல்ல அதையும் தாண்டி நட்புன்னு ஒண்ணு இருக்குன்னு நம்பிட்டு இருந்தேன், அதெல்லாம் பொய் ஆக்கிட்ட..!
அதையும் தாண்டி காசுன்னு ஒண்ணு இருக்குன்னு புரிய வச்சிட்ட ரொம்ப நன்றி நண்பா......
     
வலியுடன் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு போனான்....

இப்போதுதான் சூர்யாவின் பார்வையில் உலகம் விடிந்திருந்தது .......!!










No comments:

Post a Comment